சினிமா செய்திகள்செய்திகள்

சரித்திரத் சாதனை படைத்த ஓர் விதையின் கதை இது..!

ஆரூர்தாஸின் ஒரு சில குறிப்புகள்..!

முகப்புரை

இந்தப் பிரபஞ்சத்தில் சிலர் வாயால் போதிப்பதற்காக மகான்களாக அவதரிக்கின்றனர்..!

கௌதமபுத்தரைப் போல
இயேசுநாதரைப் போல
நபிகள் நாயகத்தைப் போல
குருநானக்கைப் போல
இராமகிருஷ்ண பரம ஹம்சரைப் போல
விவேகானந்தரைப் போல
மூவாச்சாரியர்களைப் போல

சிலர் வாள்கொண்டு, வெற்றி கண்டு,
மண்ணும் பொன்னும் பெண்ணும் கொள்வதற்காகப் பிறக்கிறார்கள்.

மாவீரன் அலக்ஸாண்டரைப் போல
மாவீரன் நெப்போலியனைப் போல
மண் ஆண்ட மன்னர்களைப் போல

சிலர் வாள்இன்றி வெறும் வார்த்தையை வைத்தே, அடிமைத்தளையை அறுத்தெறிந்து அதிலிருந்தும் மக்களை மீட்பதற்காகப் பிறக்கின்றனர்.
ஆபிரகாம் லிங்கனைப் போல
புரட்சி வீரர் லெனின் போல
கரிபால்டியைப் போல
அண்ணல் காந்தி அடிகளைப் போல
நெல்சன் மண்டேலாவைப் போல
யாசர் அராபத் போல
முஜிபுர் ரகுமானைப் போல

சிலர் மக்களிடையே மண்டிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்துப் பகுத்தறிவைப் பரப்பிச் சீர்த்திருத்துவதற்காகப் பிறக்கிறார்கள்.

சாக்ரடீஸ் போல, இங்கர்சால் போல, கலிலியோ போல, ராஜாராம் மோகன்ராய் போல, தந்தை பெரியார் போல, மகாகவி பாரதி போல, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போல, பேரறிஞர் அண்ணா போல..! கலைஞர்.மு.கருணாநிதி போல..! சிலர், சமுதாயத்தின் அடித்தளத்தில் பிறந்து, வளர்ந்து வறுமையில் வாடி, தம் குறிக்கோளாலும் கொண்ட கொள்கையாலும் மேன்மையுற்று மேலே வந்து உயர்பதவி வகித்து, மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவாகிறார்கள்.

அரசியல் சட்டத்தை வகுத்த
அண்ணல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கார் போல
அமைச்சர்களை உருவாக்கிய பெருந்தலைவர் கு.காமராசர் போல

ஆசியாவிலேயே நடிகர் நல்லமைச்சர் ஆனார் என்ற பெருமைக்குரிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போல

இந்தியாவிலேயே முதன் முறையாக திருட்டு வி.சி.டி மூலம் திரையுலகம் உலகம் வீழ்ச்சி அடைந்த போது எழுச்சி கொண்டு திரையுலகத்தை காத்திட்ட புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா போன்ற அஞ்சாத உள்ளமும் துஞ்சாத கண்களும் கொண்ட வீராங்கனைகள் பிறக்கிறார்கள். சிலர் காவியங்கள் படைக்கும் புலவர்களாகவும் கவிதைகள் புனையும் கவிஞர்களாகவும் இசை வளர்க்கும் இன்னிசை வல்லுநர்களாகவும் நாடகங்கள் உருவாக்கும் நல்லாசிரியக் கலைஞர்களாகவும் பிறந்து பெரும் சாதனைகள் புரிகின்றனர்..!

அந்தப் பெருங்கடலில் ஓர் துளியாக எங்கோ பிறந்த ஓர் சிறு விதை, காலக்காற்றில் பறந்து வந்து எங்கோ விழுந்து முளைத்து வளர்த்து, சின்னஞ்சிறு செடியாகத் தக்கத் தருணத்தில் தருவாகி கிளைகள் பரப்பி நிழல் தருவதைப் போல, ‘அன்னவயல் சூழ்ந்த ஆரூர்’ என்று சைவ சமயக் குரவரால் பாடப்பெற்றதும் தியாகேசன் கோயில் கொண்டிருப்பதுமான திருத்தலமாம் திருவாரூரிலிருந்து வந்து, தியாகராய நகரில் குடியேறி சென்னைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஆரூர்தாஸ் – அன்றைய ஒருங் கிணைந்திருந்த தஞ்சை மாவட்டத்தின் நாகப்பட்டிணம் நகரில், 1931-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் நாளில், தாய் வழிப்பாட்டனார் இல்லத்தில் எஸ்.ஏ.சந்தியாகு நாடார்-ஆரோக்கிய மேரி அம்மாள் தம்பதியர்க்குத் தலைமகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இவர்க்கு இட்ட பெயர் ‘ஜேசுதாஸ்’ என்பதாகும் இவர் உடன் பிறந்தவர் மூன்று சகோதரர் மூன்று சகோதரியர். தந்தை வழிப்பூர்வீக ஊரான திருவாரூர் பவித்திரமாணிக்கம் கிராமத்தில் வளர்ந்து, ஆரம்பக்கல்வி கற்றபின்னர், திருவாரூர் கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து, எஸ்.எஸ்.எல்.ஸி பயின்று முடித்தார்.

தமிழ்ப்பற்றும் புலமையும் இயற்கையில் அமையப் பெற்றிருந்த தனது தந்தை வழி பின்பற்றி, இவரும் இளமையிலேயே தமிழார்வம் கொண்டு, பள்ளியிலேயே தமிழ் வகுப்புகளில் முதல் மாணவராகத் திகழ்ந்தார்.

இவரது எழுத்து வன்மையும், பேச்சுத் திறனும் கண்ட தமிழாசிரியர் இவரைத் தஞ்சை & கரந்தைத்தமிழ்க் கல்லூரியில் சேர்த்துப் பயிற்றுவித்துப் Ôபுலவர்Õ பட்டம் பெற்றுத் தமிழாசிரியர் ஆக்க விரும்பினார்.

அந்த ஆர்வத்துடன் இவர் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியதுடன் சமூக நாடகங்களும் எழுதி, நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் நடத்தி வந்தார்.

இவரது கலை ஆர்வத்தையும் திறமையையும் அறிந்த குளிக்கரை என்.பி.முருகப்பா என்னும் ‘ராஜபார்ட்’ நாடக நடிகர் இவரை அழைத்துக் கொண்டு வந்து அக்காலத்தில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதிப் புகழ்பெற்று விளங்கிய கவி தஞ்சை ராமையா தாஸ் இடம் அறிமுகப்படுத்தினார்.

இவருடைய எழுத்துக்களைப் படித்துப் பார்த்த அவர் மகிழ்ந்து பாராட்டியதுடன், அப்போது வசனம் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த ‘நாட்டியதாரா’ என்ற படத்திற்குத் தனது உதவியாளராக மாதம் 50ரூபாய் சம்பளத்தில் அமர்த்திக்கொண்டார்.

அது 1954-ஆம் ஆண்டு அப்பொழுது வயது 22 அதே ஆண்டில் தனது சொந்த அத்தை மகளான லூருது மேரியைத் திருமணம் புரிந்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பெண்கள் ஒரு பிள்ளை.

திரைப்படத்துறையில் இவரது ஆரம்ப ஆசானாக அமைந்த தஞ்சை ராமையாதாஸ் இவரை ‘ஆரூர்தாஸ்’ என்று அன்புடன் அழைக்க ஆரம்பித்து, அதுவே இவர்க்குப் பெயராக நிலைத்து விளங்கலாயிற்று.

1955-இல் ஜெமினி கணேசன்&சாவித்திரி நடித்த சௌபாக்கியவதி படத்திற்குத் துணை வசனகர்த்தாவாகவும் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். பின்னர் மகுடம் காத்த மங்கை படத்திற்கு முதன் முதலாகத் தனித் வசனம் எழுதினார்.

Show More

Related Articles

Close